

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் 9-ல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஒரு முன்னாள் அமைச்சர் தவிர அனைவருக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பாஜக மத்திய தேர்தல் குழு கட்சியின் தேசியத்தலைவர் நிதின் விபின் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றும் மத்திய தேர்தல் குழு அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தலுக்கான 9 தொகுதிகள் வேட்பாளர்களை தலைமைப்பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலருமான அருண்சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்விவரம்: * மண்ணாடிப்பேட்- அமைச்சர் நமச்சிவாயம், * ஊசுடு- எம்எல்ஏ தீப்பாய்ந்தான், * காலாப்பேட்- எம்எல்ஏ கல்யாணசுந்தரம், * ராஜ்பவன்- மாநிலத்தலைவர் ராமலிங்கம், * முதலியார்பேட்- அமைச்சர் ஜான்குமார், * மணவெளி- சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், * திருநள்ளார்- எம்எல்ஏ ராஜசேகரன், * நிரவி டிஆர்பட்டிணம்- மீனாட்சி சுந்தரம், * மாஹே- தினேசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை, மொத்தம் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்து தற்போது 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ஊசுடுவில் வென்ற பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சாய் சரவணன் குமாருக்கு சீட் தரப்படவில்லை.
அதேபோல் என்.ஆர்.காங்கிரஸில் அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் போட்டியிட்டு வென்ற ராஜ்பவன் தொகுதி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு தரப்படாது. அதேபோல் மங்கலம் தொகுதியில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சீட் தராமல் முதல்வர் ரங்கசாமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.