

கோவையில் பேட்டியளித்த எஸ்டிபிஐ தேசிய துணைத் தலைவர் முஹம்மது ஷஃபி. படம்: ஜெ.மனோகரன்
எஸ்டிபிஐ தேசிய செயற்குழுக் கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. இதில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், ஜனநாயகம், அரசியலமைப்பு, மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், கட்சியின் தேசிய துணைத் தலைவர் முஹம்மது ஷஃபி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எஸ்ஐஆர் பணிகள் மூலம் பல மாநிலங்களில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்குகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, சரிபார்ப்பு மற்றும் தரப்படுத்தல் என்ற போர்வையில் சிறுபான்மையினர், புலம்பெயர் தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், அரசியலில் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களிலும், தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் மட்டும் எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கம் திட்டமிட்டு நடத்தப்படுவது, அவர்களின் அரசியல் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திர அமைப்பாக செயல்படாமல், மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து, பெருமளவிலான வாக்குரிமை பறிப்புக்கு உதவுகிறது.
எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைஸியை போலியான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலாகும். வரும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார். தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் அஹமது, மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பொருளாளர் கோவை முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.