புதுக்கோட்டை அருகே கதவு திடீரென திறந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்

ஓட்டுநர் சஸ்பெண்ட், தற்காலிக பணியாளரான நடத்துநர் பணியில் இருந்து விடுவிப்பு
புதுக்கோட்டை அருகே கதவு திடீரென திறந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்​கோட்டை அருகே அரசுப் பேருந்​தின் கதவு திடீரென திறந்​த​தால், படிக்​கட்​டில் பயணம் செய்த 10 மாணவி​கள் கீழே விழுந்து காயமடைந்​தனர். இது தொடர்பாக பேருந்து ஓட்​டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்காலிக பணியாளான நடத்துநர் விடுவிக்கப்பட்டார்.

புதுக்​கோட்டை மாவட்​டம் கீரனூரில் இருந்து புதுக்​கோட்​டைக்கு நேற்று காலை அரசு நகரப் பேருந்து வந்து கொண்​டிருந்​தது. அப்​போது பேருந்​தில் கூட்​டம் அதி​கம் இருந்​தது. ரெங்​கம்​மாள் சத்​திரம் நிறுத்​தத்​தில் பேருந்து நின்று புறப்​பட்ட சிறிது நேரத்​தில், மூடப்​பட்​டிருந்த பேருந்து கதவு திடீரென திறந்​தது. இதனால், படி​யில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவி​கள் 10 பேர் கீழே விழுந்​ததை கண்டு பயணி​கள் கூச்​சலிட்​ட​தால், பேருந்து உடனடி​யாக நிறுத்​தப்​பட்​டது.

கீழே விழுந்து காயமடைந்த மாணவி​கள் 10 பேரும் அங்​கிருந்து ஆம்​புலன்ஸ் மூலம் புதுக்​கோட்டை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். அவர்​களில் 2 பேர் உள் நோயாளி​களாக​வும், 8 பேர் புற நோயாளி​களாக​வும் சிகிச்சை பெற்​றனர்.

காயமடைந்த மாணவி​களை மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் எஸ்​.கலை​வாணி, மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் சண்​முகம் ஆகியோர் பார்த்து ஆறு​தல் தெரி​வித்​தனர். இச்​சம்​பவம் குறித்து வெள்​ளனூர் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். காயமடைந்த மாணவி​கள் அனை​வரும் நரிக்​குறவர்​கள் இனத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுகுறித்து அரசு போக்​கு​வரத்து அதி​காரி​கள் தெரி​வித்​த​தாவது: பேருந்​தில் ஏற்​கெனவே 90 பயணி​கள் இருந்த நிலை​யில், ரெங்​கம்​மாள் சத்​திரத்​தில் மேலும் 30 பேர் ஏறிய​தால் கூட்டம் மிதமிஞ்சி இருந்​தது. இதைத் தொடர்ந்து பேருந்​தின் தானி​யங்கி கதவை ஓட்​டுநர் மூடி​யுள்​ளார்.

அப்​போது, முன்​பக்க படிக்​கட்​டின் அருகே அவசர காலகதவைத் திறப்​ப​தற்​காக பொருத்​தப்​பட்​டிருந்த பொத்​தானை யாரோ அழுத்​தி​யுள்​ளனர். இதனால், கதவு திறந்​த​தால், படிக்​கட்​டில் நின்​றிருந்த மாணவி​கள் கீழே விழுந்து விட்​டனர். எனினும், பணி​யில் அலட்​சி​ய​மாக இருந்​த​தாக பேருந்து ஓட்​டுநர் அர்ச்​சுணன், நடத்​துநர் மணி​கண்​டனுக்​கு நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டுள்​ளது என்​றனர்.

கூடு​தல் பேருந்து: புதுக்​கோட்​டை- திருச்சி தேசிய நெடுஞ்​சாலையில் உள்ள இந்த வழித்​தடத்​தில் பள்ளி மற்​றும் கல்​லூரி​களுக்கு சென்று திரும்​பும் நேரங்​களில் போதிய பேருந்து வசதி இல்​லை. எனவே, கூடுதல் பேருந்​துகளை இயக்க நடவடிக்கை எடுக்க ​மக்​கள் அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்ளனர்.

இந்​நிலை​யில், அரசுப்பேருந்து ஓட்​டுநர் அர்ச்​சுணனை பணி​யிடை நீக்​கம் செய்​தும், தற்​காலிகப் பணி​யாள​ரான நடத்​துநர் மணி​கண்​டனை பணி​யில் இருந்து விடு​வித்​தும் புதுக்​கோட்டை அரசுப் போக்​கு​வரத்​துக் கழக மண்​டலப் பொது மேலா​ளர் கார்த்​தி​கேயன் உத்​தர​விட்​டுள்ளார்.

புதுக்கோட்டை அருகே கதவு திடீரென திறந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவிகள்
கேமரா இல்லாத போன்களுக்கு கோயில்களில் அனுமதி: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in