

சென்னை: தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் சுமார் 13,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு தீர்மானம் செய்துவருகிறது.
எனினும், பல்வேறு தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணத்தைவிட பெற்றோர்களிடம் கூடுதலாக வசூலிப்பதாக தொடர் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
அதற்கான அறிக்கையை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 16-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அனைத்து தனியார் பள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநர் சுகன்யா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தனியார் பள்ளிகள் அனைத்தும் கல்விக் கட்டண விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வைக்க வேண்டும்.
வகுப்புவாரியாக மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அனைத்து பள்ளிகளும் அச்சிட்டு வழங்க வேண்டும். அதனுடன், பள்ளிகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது.
இந்த வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தனியார் பள்ளிகளும் ஜூன்-5-ம் தேதிக்குள் கல்விக் கட்டண தகவல்களை விளம்பரப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அது சார்ந்த விவர அறிக்கையை இயக்குநரகத்தில் ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டண விவரங்களை தகவல் பலகையில் இருப்பதை முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.