

சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம், 99-வது வார்டுக்குட்பட்ட கங்காதீஸ்வரர் கோயில் சாலையில் அமைந்துள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு, பள்ளி வளாகம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ‘பிளாக்-பி’ கட்டிடத்தில் தரை மற்றும் முதல் தளத்துடன் 6 வகுப்பறைகளும், 2 ஆசிரியர் அறைகளும் இடம்பெற்றுள்ளன. ‘பிளாக்-ஏ’ கட்டிடத்தில் 10 வகுப்பறைகள் மற்றும் பல்நோக்கு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இரண்டு கட்டிடங்களிலும் சேர்த்து மொத்தம் 20 ஸ்மார்ட் வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், பேவர் பிளாக் தளம், வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
18 வகுப்பறைகள்
இதேபோல், திரு.வி.க. நகர் 78-வது வார்டுக்குட்பட்ட தானா தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.50 கோடி செலவில் சென்னை நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
1,598 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 18 வகுப்பறைகள், 2 ஆசிரியர் அறைகள், கணினி ஆய்வகம், கலையரங்கம் மற்றும் சமையலறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய பள்ளிக் கட்டிடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.
தொடர்ந்து, வி.வி. கோயில் தெருவில் நகர்ப்புற சுகாதார தேசிய திட்டம் மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற ஆரமப சுகாதார நிலைய கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், மாமன்ற உறுப்பினர் பரிதி இளம்சுருதி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.