

திருவள்ளூர்: சுவர் இடிந்து பள்ளி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் மோகித்(11) சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேசிய பட்டியலின ஆணைய தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல இயக்குநர் ரவிவர்மன், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்த இடம், வகுப்பறைகளைப் பார்வையிட்டதுடன், பள்ளிக் கட்டிடத்தின் தரம் உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் கனிமொழி, டிஎஸ்பி கந்தன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட அவர், மாணவர் மோகித் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
மாணவர் உயிரிழப்பு தொடர்பாக அவர்களிடமும் விசாரணை நடத்தினார். பிறகு செய்தியாளர்கள் பேசிய ரவிவர்மன் “மோகித் உயிரிழப்பு தொடர்பாக தயாரிக்கப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதேபோல, அந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றை திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆய்வு செய்து, உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை அகற்றுமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.