

புதுடெல்லி: தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தக் கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் இந்த வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தேர்தல் தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், மரிய வில்சன் ஆகியோருக்கு எதிராகவும் தேர்தல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல, தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு மொத்தம் 54 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் வெங்கடாசலபதி தரப்பு ஆஜராகி, தமிழகத்தில் இம்முறை 54 தேர்தல் வழக்குள் தொடரப்பட்டுள்ளன, இது கடந்த காலங்களின் எண்ணிக்கையை விட அதிகம் ஆகும். எனவே, தேர்தல் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க உரிய உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “தமிழகத்தில் 54 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதா? தமிழகத்தில் மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளன?” என வினவினார். அதற்கு, 234 தொகுதிகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது, ஆனால் இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.