

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான சட்ட மசோதாக்கள் குறித்து ஆய்வு செய்ய பாஜக உறுப்பினர் பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மசோதா குறித்து ஆய்வு செய்யும் இந்தக் குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளை அக்டோபர் 6-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தின் குழுவானது, சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை ஆய்வு செய்யும் நீதித்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுடனான கூட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து குழுவுக்கு அனுப்பப்பட்ட தகவலில், “இந்தத் திருத்தம் எதிர்காலத்தில் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் நிர்வாக ரீதியாக இதுகுறித்து விவாதிப்பது பொருத்தமானதாக இருக்காது” என்று தெரிவித்துள்ளது.