ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
Updated on: 
1 min read

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காந்தி ஜெயந்தி நாளான இன்று (அக்.02) மும்பை சிவாஜி பூங்காவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நடந்த போராட்டத்தில், போலீசாரின் தடையை மீறி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.

அரசியல் பேரணிகளுக்குப் பெயர்பெற்ற சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு, தாதர் ரயில் நிலைய வழிகளில் தடுப்புகளும் அமைக்கப்பட்டன. இருப்பினும், தடையை மீறி மைதானத்தை அடைந்த போராட்டக்காரர்கள், "ஞானேஷ், ஜனநாயகத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?", "உடனே ராஜினாமா செய்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

பிரபல நடிகர்கள் ஷபானா ஆஸ்மி, நசிருதீன் ஷா, பாடகர் விஷால் தத்லானி ஆகியோரும் பங்கேற்றனர். மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும் செயல்பாட்டாளருமான துஷார் காந்தியும் வந்திருந்தார்.

போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே, நீட் முறைகேடு தொடர்பாக ஜந்தர் மந்தரில் போராடி இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் போராட வேண்டிய நிலைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் "திறமையின்மையே" காரணம் என்று சாடினார். மேலும், முடிந்தால் போராட்டக்காரர்களைச் சிறையில் அடைக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்குச் சவால் விடுத்தார். 

மேலும் பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு வெற்று முழக்கம் மட்டுமே; பாஜக உண்மையில் ஒரே நாடு ஒரே கட்சி என்ற முறையையே கொண்டுவரத் துடிக்கிறது” என்றார். சிஜேபி அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஜின்க்யா ஷிண்டே பேசுகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகுவதோடு அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தாதர் பகுதியில் கணிசமான செல்வாக்கு கொண்ட சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (மநசே) ஆகிய கட்சிகள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் சிஜேபி அமைப்பு சார்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடைமுறையை உடனடியாக முடக்க வேண்டும் மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மும்பையில் இப்போராட்டம் நடைபெற்ற நிலையில், முன்னதாக தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் சிஜேபி தொண்டர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது.

இன்றையப் போராட்டத்தை தொடர்ந்து வரும் அக். 6-ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடத்த சிஜேபி கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்
ஞானேஷ் குமார் பதவி விலக கோரி டெல்லியில் போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in