எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

சிசிடிவி ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார்
எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் கயல்விழி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரத்துடன் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடம் சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இக்கட்டிடத்தில், பாரத் ஸ்டேட் வங்கியின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (என்ஆர்ஐ) கிளை செயல்பட்டு வருகிறது.

மின்தூக்கி பழுது பிரச்சினை: இந்நிலையில், இந்த கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி சமீபத்தில் பழுதாகியுள்ளது. இதுபற்றி தெரிவிப்பதற்காக கட்டிட உரிமையாளர் கயல்விழியின் உதவியாளரைத் தொடர்புகொள்ள வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் முயன்றுள்ளார். ஆனால், உதவியாளர் அவரது அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து, நேரடியாக கயல்விழியைத் தொடர்பு கொண்டு மின்தூக்கி பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார்.

உடனடியாக வங்கி கிளைக்கு வந்த கயல்விழி, நேரடியாக தனது தொலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசியதற்காக வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மேலாளர் ஹர்ஷீன் சிங் தனது கைகளை கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருக்க, இதனால் மேலும் கோபமடைந்த கயல்விழி திடீரென மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.

வங்கியின் கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து, கயல்விழி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் வங்கியின் ஆர்பிஓ முதன்மை மேலாளர் நமச்சிவாயம், சிசிடிவி ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வங்கி மேலாளரின் கன்னத்தில் கயல்விழி ஓங்கி அறையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு
“அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்” - பழநி நில முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in