

சென்னை: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர், கடந்த ஏப்.9-ம் தேதி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு கடந்த புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.
வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவை மக்களே தூக்கி எறிந்து விட்டனர். கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை தோல்வியுற செய்ததன் மூலம், மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
முதல்வர் தலையீடு
வழக்கமாக ஆலோசனை வாரியத்துக்கு சென்று ஆஜரான பிறகு, குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தால், அந்த உத்தரவு சிறைக்கு வந்து சேர 10 நாட்களுக்கு மேல் ஆகும். என் விவகாரத்தில் கடந்த திங்கட்கிழமை ஆலோசனை வாரியத்துக்கு முன்பு ஆஜரானேன்.
தொடர்ந்து புதன்கிழமை (நேற்று முன்தினம்) தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து, அதற்கான அரசாணையை சிறைக்கு அனுப்பியது. உடனே நான் சிறையில் இருந்து விடுவுக்கப்பட்டேன்.
முதல்வர் விஜய்யே இவ்விவகாரத்தில் தலையிட்டதால் இது சாத்தியமானது. இதற்காக முதல்வர் விஜய்க்கும், நீதிமன்றங்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.