

சென்னை: சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா காலமானார். சவுக்கு சங்கர் சிறையில் உள்ள நிலையில் தன் மகனை பார்க்காமலேயே அவரது உயிர் பிரிந்தது.
சவுக்கு மீடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் 2 மோசடி வழக்குகளைப் பதிவு செய்து கடந்த டிச.13 அன்று கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
ஜாமீன் தேதி முடிந்த நிலையில் சரணடைய வேண்டிய சவுக்கு சங்கர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 8-ம் தேதி ஆந்திராவில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்தச் சூழலில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவாகி உள்ளது. அந்த வழக்குகளில் இருந்து தனது மகனை மீட்டு வரும் முயற்சியில் கமலா ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.