

புதுடெல்லி: தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்து, அந்த நிலத்தில் பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டி, வகுப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை மீட்கவேண்டும் என்று கடந்த ஜனவரி 9-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செய்த மேல் முறையீீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் சாஸ்த்ரா பல்கலைக்கழக நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போது பல்கலைக்கழகம் அமைந்துள்ள அந்த இடத்திற்கு பதிலாக 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான வேறு இடத்தை வழங்கவும் அல்லது சந்தை மதிப்பின் அடிப்படையில் நிலத்துக்கான பணத்தை அரசுக்கு செலுத்தவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்தில் தற்போது கல்வி நிலையம் செயல்பட்டு வருவதால் அதற்கு பதிலாக வேறு நிலத்தை அரசு ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்ரியா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆகியோர், “இந்த நிலம் தொடர்பான வழக்கை கடந்த காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் தற்போது மீண்டும் அதே விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழக தரப்பு எழுப்பி வருகிறது. அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என தெரிவித்தனர்.
ஆனால் அந்த வாதத்தை முழுமையாக ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போது அங்கு ஒரு பல்கலைக்கழகம் கல்விக்காக செயல்பட்டு வருவதன் காரணமாக இந்த விவகாரத்தை தமிழக அரசு கருத்தில் கொள்ளலாமே, வேறு ஒரு இடத்தில் நிலத்தை பெற்றுக் கொள்ள என்ன பிரச்சினை உள்ளது? என வினவியதோடு, இந்த விவகாரத்தில் அரசு ஒரு உரிய முடிவை எடுக்கலாமே? என்றும் யோசனை தெரிவித்தனர்.
அப்போது, இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க ஏதுவாக, வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கல்வி நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த இடத்துக்கு பதிலாக வேறு நிலத்தை பெற்றுக்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.