மயிலாடுதுறையில் சசிகலா - ராமதாஸ் அணி ‘அப்செட்’ - பாமக அன்புமணி தரப்பினர் ‘குஷி’

‘உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட...’
மயிலாடுதுறையில் சசிகலா - ராமதாஸ் அணி ‘அப்செட்’ - பாமக அன்புமணி தரப்பினர் ‘குஷி’
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதியில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர், மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், சசிகலா கட்சியினரும், ராமதாஸ் அணியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாமக அன்புமணி தரப்பினர் குஷியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் சித்தமல்லி பழனிச்சாமி போட்டியிடுகிறார். இங்கு சசிகலா கட்சி சார்பில் சுதாகர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அதற்கு அடுத்த நாள், சசிகலா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அதே மயிலாடுதுறை தொகுதியில் மாவட்டச் செயலாளர் பாக்கம் சக்திவேல் என்பவரை வேட்பாளராக றிவித்தார். ஒரே கூட்டணியில் உள்ள இருவரும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்ததால், அக்கட்சிகளின் நிர்வாகிகள் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து இரு கட்சியினரும் பேசி, இறுதியில் பாமக ராமதாஸ் அணி சார்பில் பாக்கம் சக்திவேலும், மாற்று வேட்பாளராக அவரது மனைவி சுகுணாவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின்போது பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் சக்திவேல், மாற்று வேட்பாளர் சுகுணா ஆகியோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் முறையாக இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராமதாஸ் அணி, சசிகலா கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, ராமதாஸ் அணியில் இருந்த வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் தங்க அய்யாசாமி அதிருப்தி அடைந்து, நேற்று முன்தினம் அன்புமணியை சந்தித்து அவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றுவதாக ஆதரவு தெரிவித்தார்.

கடந்த 2021 தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமாரிடம் 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவினார்.

இந்த முறை ராமதாஸ் அணி தனித்துப் போட்டியிடுவதால் இந்த முறையும் வெற்றி கைநழுவி போய்விடுமோ என அச்சத்தில் பாமக அன்புமணி அணியினர் இருந்த நிலையில், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியாகிவிட்டதால் குஷியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தொகுதியில் அறிவித்தபடி நாங்களே போட்டியிட்டிருக்கலாம் என சசிகலா கட்சியினரும், எங்களால் தான் உங்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு போய்விட்டது என ராமதாஸ் அணியினரும் கவலை தெரிவித்தனர். அதேசமயம், ராமதாஸ் அணியினரின் வாக்குகள் பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு கிடைக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.

மயிலாடுதுறையில் சசிகலா - ராமதாஸ் அணி ‘அப்செட்’ - பாமக அன்புமணி தரப்பினர் ‘குஷி’
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in