

வரும் தேர்தலில் மக்கள் திமுக-வுக்கு சரியான பாடத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு எதையும் செய்யாத திமுக-வை நான் விடுவதாக இல்லை” என்று சசிகலா தெரிவித்தார்.
நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: அதிமுக-வின் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்காக உழைத்தனர். தமிழக மக்கள்நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தனர். அவர்கள் இருவரும் தமிழக மக்களின் மனங்களில் உள்ளனர்.
அவர்கள் வரிசையில் நாங்களும் தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம் என உறுதியளிக்கிறோம். அதிமுக தொண்டர்கள் ஆதரவுடன் 2026 தேர்தலில் நிச்சயமாக ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம். அவர்கள் செய்த மக்கள் நல திட்டங்களை நிச்சயம் தொடர்வோம். தேர்தலில் மக்கள் திமுக-வுக்கு சரியான பாடத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு எதையும் செய்யாத திமுக-வை நான் விடுவதாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக-விலிருந்து செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் வெளியேறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் பெரிய முடிவுகளை எடுக்கும் போது அவசரம் காட்டமாட்டார்கள். அதனால் ஒருவர் மீதிருக்கும் கோபத்தில் அதிமுக-வினர் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது" என்றார்.