

சென்னை: ‘பாஜக மேலிடம் அழைத்து மாநில தலைவர் பொறுப்பேற்குமாறு தெரிவித்தால் எனது முடிவை அறிவிப்பேன்’ என்று நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக தலைவராக நான் பதவியேற்கப் போவதாக வெளியாகும் செய்திகளைப் பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்துகொள்கிறேன்.
பாஜக மேலிடம் என்னை அழைத்து, மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு தெரிவித்தால், அப்போது என்னுடைய முடிவைத் தெரிவிப்பேன்.
நான் பாஜக மாநிலத் தலைவராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ இருந்தால், தவெக ஆட்சியைப் பற்றி கருத்து தெரிவிக்கலாம். தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாததால், தவெக ஆட்சி குறித்து என்னால் கருத்துக்கூற இயலாது.
‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் அரசியல் கட்சியாக உருவாவதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் அண்ணாமலை களமிறங்குகிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியைத் தொடங்கலாம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பொருத்தவரை, எங்கும் பெரிய அளவிலான கலவரங்கள் ஏற்படவில்லை. ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு தமிழக அரசுதான் காரணம் என்றும் கூறிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.