

நாகை மாவட்டம் பெரியகண்ணமங்கலத்தில் நீரின்றி கருகி வரும் சம்பா பயிர்கள்.
தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் காய்ந்து கருகி வருவதால், ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி வயல்களில் இறங்கி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் கிடைக்காததால் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அம்மாப்பேட்டை, புத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் வளர்ந்து, சூல் பிடிக்கும் பருவத்தில் போதிய தண்ணீரின்றி காய்ந்து கருகி வருகின்றன.
வயல்களில் தண்ணீர் இல்லாததால் நிலங்கள் ஆங்காங்கே வெடித்துக் காணப்படுகின்றன. இதனால் சம்பா, தாளடி சாகுபடிக்காக விவசாயிகள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டாவின் முக்கிய வாழ்வாதாரமான சம்பா மற்றும் தாளடி சாகுபடி தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளைக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி, அதைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்(இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) தஞ்சாவூர் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நேற்று அம்மாப்பேட்டையில் காய்ந்து கருகிய சம்பா, தாளடி வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து உரிய நிவாரணத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு மாற்றுப் பாசன வசதிகளை ஏற்படுத்தி, தேவையான இடங்களில் மின்சாரம் மற்றும் பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் நேற்று தண்ணீரின்றி காய்ந்து கருகிய சம்பா, தாளடி வயல்களில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
இதேபோல, நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் மூன்று போக சாகுபடி செய்து வந்த விவசாயிகள் தற்போது முறையாக தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடியை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்ட நிலையில், தற்போது நெற்பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன.
எனவே, அரசு தண்ணீர் பாய்ச்ச மானியத்தில் மோட்டார் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு டீசல் மானியம் மற்றும் மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இன்றி பாதிக்கப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.