

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு அங்காடிகளில் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர் காந்திராஜ் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் அரிசி, பருப்பு, வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் சுமையை குறைக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வெங்காயம், துவரம் பருப்பை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக வெளிச் சந்தையைவிட குறைந்த விலையில் விற்பனை செய்துவருகிறது.
கூட்டுறவு கடைகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கும், உளுத்தம்பருப்பு ரூ.140-க்கும், பூண்டு, தனியா தலா ரூ.240-க்கும், மிளகாய் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, அத்தியவாசியமான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பானது கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தத் தொகுப்பு விற்பனை செய்யப்படும்.
இதில் கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, புளி தலா 250 கிராம், கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு தலா 100 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடை கொண்ட 10 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெறும்.
இந்த 10 பொருட்களும் ஒருங்கிணைந்த மளிகைத் தொகுப்பாக மட்டுமே விற்கப்படும். தனித்தனியாக விற்கப்படாது. இந்த திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இத்திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.