

சென்னை: “முடக்கப்பட்ட சொத்துகளுக்கான விற்பனை ஆவணத்தை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய முடியாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித்துறை மற்றும் கோவை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட கோவையில் உள்ள ஒரு சொத்தை, சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் கண்ணன் என்பவர் விலைக்கு வாங்கியுள்ளார். முடக்கப்பட்ட சொத்து என்பதால் அதன் விற்பனை பத்திரத்தை சட்ட ரீதியாகப் பதிவு செய்ய முடியாது என கோவை சார் பதிவாளர் மறுத்துள்ளார்.
இதை எதிர்த்து மகேஷ் கண்ணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மோசடி அல்லது போலி ஆவணங்கள் தொடர்பான சொத்து விற்பனையை மட்டுமே பதிவுச் சட்டம் 22-பி-ன் படி பதிவு செய்ய முடியாது.
ஆனால் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பதிவு செய்ய தடை இல்லை என்பதால் மகேஷ் கண்ணனின் விற்பனை பத்திரத்தைப் பதிவு செய்யும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அந்த சொத்தை சட்டப்படி முடக்கி வைக்க கோவை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்ற கோவையைச் சேர்ந்த ஆசிக் அலி, அஜ்ஜூர் முகமது ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்ட ஒரு சொத்தைப் பதிவு செய்யும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், வருமான வரித்துறை மற்றும் நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்ட சொத்துகளின் விற்பனையைச் சட்ட ரீதியாக பதிவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட சார் பதிவாளர், ஒரு விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய முடியாது என சட்டப்பூர்வமாக மறுத்தால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத்தில் மாற்றுத் தீர்வு முறைகள் உள்ளன.
அதை விடுத்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்கு பரிகாரம் தேட முடியாது எனக் கூறி மகேஷ் கண்ணனின் விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்து கொடுக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும், தனி நீதிபதியின் உத்தரவு அடிப்படையில் ஏற்கெனவே பதியப்பட்ட விற்பனை பத்திரத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.