“தவெக அரசின் அலட்சியத்தால் அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி” - தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

Updated on: 
1 min read

சென்னை: ‘வண்டலூர் அருகே பள்ளி வளாகத்திற்குள்ளேயே பட்டப்பகலில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளிக்குள் புகுந்து மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

அரசுப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே அரங்கேறியிருக்கும் கொடூரச் சம்பவம் தொடர்பாக விரிவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டிய காவல்துறையோ, இவ்விவகாரத்தை வெளியே தெரியாமல் மூடி மறைக்க முயல்வதாக பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவ, மாணவியர்கள் கல்வி கற்க வேண்டிய அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதை விட, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம்தான் முக்கியம் என கருதும் விஜய்யை முதலமைச்சராகப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் அரங்கேறும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அக்குற்றங்களைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையும் முதலமைச்சர் விஜய்யை போலவே ரீல்ஸ் எடுப்பதில் முழுமையாக இறங்கிவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அளித்திருக்கும் அரைகுறையான விளக்கம், ஏற்கனவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கைப் போலவே இவ்வழக்கையும் காவல்துறை மூடி மறைக்க முயல்கிறதோ என்ற கேள்வியும் அனைவரின் மத்தியில் இந்நேரத்தில் எழுப்பியுள்ளது.

எனவே, ஒட்டுமொத்த பள்ளி மாணவிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தை மூடி மறைக்க முயலும் நடவடிக்கையைக் கைவிட்டு, விரிவான விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என காவல்துறையையும், தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p><em>டிடிவி தினகரன்</em></p></div>
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக பணப்பட்டுவாடா: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in