கோவையில் அனுமதியற்ற மகளிர் விடுதிகளால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

கோவையில் அனுமதியற்ற மகளிர் விடுதிகளால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
Updated on
1 min read

கோவை: கோவையில் அனுமதியின்றி இயங்கும் மகளிர் விடுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனை சமூகநலத் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் கல்வி நிறுவனங்களில் படிக்கும், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர் தங்குவதற்காக ஏராளமான தனியார் மகளிர் விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல விடுதிகள் அரசிடம் முறையாக பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாக சமூக செயல்பாட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு கூறியதாவது: மகளிர் விடுதிகள், முதியோர் காப்பகங்கள் உள்ளிட்டவை பதிவு செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.

கடந்த 2014-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் மட்டுமே விடுதிகளை பதிவு செய்ய முடியும். கோவை மாவட்டத்தில் இந்த பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை.

மாவட்டத்தில் புற்றீசல் போல் அனுமதியின்றி ஏராளமான தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. தனியாக உள்ள வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதனை மகளிர் விடுதிகளாக மாற்றியமைத்துள்ளனர்.

மகளிர் விடுதியில் தங்கியிருப்பவர்களின் வருகை, புறப்படும் நேரத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும், பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், தரமான உணவு வழங்க வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடு்கள் உள்ளன. ஆனால், பதிவு செய்யப்படாமல் இயங்கும் விடுதிகளில் இந்த விதிகள் பின்பற்றப்படுவது இல்லை.

போதிய கண்காணிப்பு இல்லாததால் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின், பெற்றோர் கவலை அடைகின்றனர். இது தொடர்பாக சமூகநலத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் அரசிடம் இதுவரை 316 விடுதிகள் பதிவு செய்யப்பட்டு்ள்ளன. மேலும், 3 விடுதிகள் பதிவு நடைமுறையில் உள்ளன. மாநகர், புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் விடுதி உரிமையாளர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, பதிவு செய்யப்படாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல விடுதிகள் பதிவு

செய்யப்பட்டன. முன்பு 100 விடுதிகள் வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது 316 விடுதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விதி மீறி இயங்கும் விடுதிகளை கண்டறிய அந்தந்த வட்டாரங்கள் வாரியாக சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பதிவு இல்லை எனக்கண்டறியப்பட்டால் நோட்டீஸ் வழங்கி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருமுறை நோட்டீஸ் வழங்கியும் பதிவு செய்யாவிட்டால், அந்த விடுதிக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றனர்.

கோவையில் அனுமதியற்ற மகளிர் விடுதிகளால் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
அதிக அளவில் தேவைப்படும் அக்சுவரியல் பட்டதாரிகள் | வெற்றி உங்கள் கையில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in