

என் மகன் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பிரிவில் படித்துவருகிறார். இன்ஜினீயரிங், ஆசிரியர் அல்லாத வேறு கணிதப் பாடம் சார்ந்த ஏதேனும் தொழில்முறைப் படிப்பு உள்ளதா? இருந்தால் ஆலோசனை கூறவும். - கோமளவல்லி, ஸ்ரீரங்கம், திருச்சி.
தங்களின் மகன் கணிதப் பாடத்தில் வல்லவராக இருப்பின் உலகின் தலைசிறந்த தொழில்சார் படிப்புகளில் ஒன்றான காப்பீடு கணிப்பாளர், நிதி இடர்க் கணிப்பாளர் (Actuarial Science) படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
இப்படிப்பை முடித்தவர்களுக்கு உலகெங்கிலும் அதிக அளவில் தேவை உள்ளது. ஆனால், இப்படிப்பை முறையாக முடித்தவர்களின் விவரங்களைப் பார்த்தால், பெரிதும் வியப் படையும் அளவுக்குக் குறைவானவர்களே உள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அண்மைக் காலம் வரை இப்படிப்பை (அனைத்து தேர்வுகளையும்) முழுமை யாக முடித்தவர்கள் ஏறக்குறைய 650 - 750 பேர் வரை மட்டுமே உள்ளனர்.
அசோசியேட்ஸ் எனப்படுபவர்கள் 250 - 310 பேர் வரை மட்டுமே உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதாவது 10 லட்சம் பேருக்கு 1 நபர் என்கிற விதத்தில் உள்ளனர். தற்போது இப்படிப்பைப் பயிலும் மாணவர்கள் ஏறக்குறைய 9,000 பேர் உள்ளதாகத் தெரிகிறது.
என்ன வேலை?
கணிதம், புள்ளியியல் கணக்கீடுகளின் அடிப்படையில் நிதி மேலாண்மை, காப்பீடு, அதற்கான இடர்கள், ஓய்வூதியம், நிதிச் சேவைகள், அவற்றுக்கான குறுகிய - நீண்டகால இடர்கள் ஆகியவற்றைக் கணிப்பது இத்துறை நிபுணர்க ளின் முக்கியப் பொறுப்பு.
அதுபோலவே ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றில் சராசரி மனித ஆயுள்காலம், தனிநபர் உடல்நலம் ஆகியவற்றின் அடிப்படையில் (காலவரையறைக்கு உட்பட்டு) ஆயுள்காலச் சந்தாத் தொகையைக் கணக்கிடுவது, அசையாச் சொத்துகள், அசையும் சொத்துகள், எதிர்பாராத விபத்துகள் உள்ளிட்ட இதர இடர்கள் குறித்த கணக்கீடுகளை அட்டவணைப்படுத்துவது போன்ற பணிகளையும் மேற்கொள்வார்கள்.
இதையடுத்து தனிநபர் ஓய்வூதியம், நீண்டகாலப் பயன்கள் (வயது, பெறும் ஊதியம், செலுத்தும் தொகை ஆகியவற்றைப் பொறுத்து கால அடிப்படையிலான அட்டவணை) ஆகிய வற்றைக் கணிப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
உலகளாவிய கல்வி வாய்ப்பு
காப்பீடு, நிதி மதிப்பீட்டுப் படிப்பைப் பொறுத்தவரை, இந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆஃப் அக்சுவரியல் ஆஃப் இந்தியா நடத்தும் ACET (Actuarial Common Entrance Examination) என்கிற நுழைவுத் தேர்வை எழுதி, தகுதி பெற்று மாணவராகப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே பல பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் அக்சுவரியல் சயின்ஸ் தொடர்பான பட்டப்படிப்புகள், முதுநிலைப் படிப்புகள், பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன. அவற்றில் பி.எஸ்சி./ பி.எஸ்சி. (ஹானர்ஸ்) அக்சுவரியல் சயின்ஸ், எம்.எஸ்சி.
அக்சுவரியல் சயின்ஸ், பி.ஜி. டிப்ளமோ இன் அக்சுவரியல் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவற்றைப் படிப்பதன் மூலம் தொழில்முறை அக்சுவரி ஆவதற்கான சில தொழில்முறைத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் நீங்கள் இத்துறையில் பணிபுரிய ஆசைப்பட்டால் IFOA (UK Institute and Faculty of Actuaries) அமைப்பின் தேர்வுகளை எழுதித் தகுதிபெற வேண்டும் அல்லது அமெரிக்காவின் SOA (Society of Actuaries) தேர்வை எழுதித் தகுதிபெற வேண்டும்.
போர் காரணமாக...
அண்மைக் காலமாக நடைபெற்றுவரும் மேற்காசியப் போர் காரணமாக, பல நூறு கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
இதன் காரணமாக உலகளாவிய மாரிடைம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டுக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியதுடன், வழக்கமான காப்பீட்டுச் சேவைகளை வழங்குவதிலும் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தன. இதனால் சரக்குக் கப்பல்களின் நிதிச் சுமையும் அதிகரித்தது.
இந்தியாவுக்கு மட்டும் 2030ஆம் ஆண்டுக் குள் 25,000 ‘அக்சுவரீஸ்’ (கணக்கீட்டாளர்கள்) தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2047இல் 'இந்திய மக்கள் அனைவருக்கும் காப்பீடு' என்கிற இலக்கின் அடிப்படையில் அதிகளவில் அக்சுவரியல் நிபுணர்கள் தேவைப்படுவார்கள். எனவே, கணிதத்தில் ஆர்வமும் திறமையும் இருந்தால் இப்படிப்பைத் தேர்வுசெய்து படிக்கலாம்.