பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!
Updated on
4 min read

உடலளவிலும், அறிவுப்பூர்வமாகவும் பாலுறவு பற்றிய புரிதலோடு அதற்கு சம்மதம் தெரிவிக்க இயலாதவர்கள் குழந்தைகள். மனமுதிர்ச்சியை எட்டாத குழந்தைகளை பாலுறவில் வலுக்கட்டாயமாகவோ, அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறியோ ஈடுபடுத்துவது தான் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை. இது மிகவும் கொடூரமான, துயரமான நிகழ்வு மற்றும் ஒரு குழந்தையின் நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு உரிமையின் மீதான கடுமையான மீறல் ஆகும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இந்த அடிப்படைத் தகவலோடு, உலகை உலுக்கிய எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடங்கி தற்போது தமிழ்நாட்டை அதிர்ச்சியில் உறையவைத்துள்ள வழக்கு பின்னணியில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிப் பார்க்கலாம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வர்ஜீனியா கிஃபர் என்ற அமெரிக்க பெண், பிரிட்டனைச் சேர்ந்த கிஷ்லெய்ன் மேக்ஸ்வெல் என்பவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் தொழில் இடைத்தரகருடன் சேர்ந்து கிஷ்லெய்ன் பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்தலில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். தானும் அவ்வாறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், 1999 முதல் 2022 வரை பாலுறவில் ஈடுபடும் வயதை எட்டாத தன்னை பலருடனும் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட வைத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதான் எப்ஸ்டீனை சிறையில் தள்ளி, உலகமுழுவதும் பல்வேறு பிரபலங்களின் பெயர்களையும் அடிபடவைத்தது.

இப்படியான அதிரவைக்கும் பாலியல் குற்றங்கள் எல்லாம் வெளிநாட்டில் தான் நடக்கும் என்பதில்லை, என்பதை நிரூபிப்பதுபோல், தமிழகத்தில் ஒரு வழக்கு வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. சென்னை அண்ணாநகரில் செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல செயற்பாட்டாளர் ஒருவர் அளித்தப் புகாரின் பேரில் 84 வயதான கிரானைட் தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணியை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளது காவல் துறை. தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் என்று அந்த நபர் குறிப்பிடப்படுகிறார்.

பணம், அதிகாரம், பாலியல் குற்றங்கள்...

எப்ஸ்டீன், ஜெம் வீரமணி நிகழ்த்தியுள்ள இதுபோன்ற குற்றங்களுக்குப் பின்னால் எப்போதும் ஒரு நிழல் வலைப்பின்னல் இருக்கிறது என்பதை சமூகம் உணர வேண்டும். ஒரு தனிநபரின் பாலியல் வக்கிரம் தாண்டி, அவரின் பணபலமும், அதைச் சுற்றியுள்ள அதிகாரமும், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் வட்டத்தில் நிலவும் அலட்சியமும் சேர்ந்தே இந்தக் குற்றங்களை நீடிக்கச் செய்கின்றன.

தமிழ்த் திரைப்படம் ஒன்றில் அரசியல் தடைகளை அகற்ற ஒரு வயதான நபர் சிறுமியை திருமணம் முடிப்பதாகக் காட்சியிருக்கும். அதுபோன்று பணம் படைத்தவர்கள், அரசியல் இன்னும் பிற அதிகாரத்தில் இருப்போரில் ஒரு சிலர் ஜோசியம், மாந்த்ரீகம் என்று சிறுமிகளை திருமணம் செய்வது, பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற கொடூரங்களை நிகழ்த்தும் போக்கும் இருக்கிறது. அதனால் தான் இதுபோன்ற பாலியல் குற்றங்களின் பின்னணியில் பெரிய வலைப்பின்னல் இருக்கிறது என்று சுட்டிக்காட்ட வேண்டியது அவசியப்படுகிறது.

பாலியல் வக்கிரம் படைத்த பண, அதிகாரம் படைத்த இத்தகைய குற்றவாளிகள், பெண் குழந்தைகளை தனக்கான இரையாகக் குறிவைப்பதில் ஒரு குறிப்பிட்ட செயல்முறையை வைத்திருக்கின்றனர்.

உதாரணத்துக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீன், பெரும்பாலும் சிங்கிள் மதர் எனப்படும் விதவை, விவாகரத்தான பெண்களை அணுகி அவர்களின் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதாக இல்லை வேறு துறை ரீதியாக அவர்களை முன்னேற்ற உதவுவதாகக் கூறியே குழந்தைகளை தன்வசப்படுத்தியுள்ளதாக காவல் அறிக்கை கூறுகிறது.

<div class="paragraphs"><p>ஜெஃப்ரி எப்ஸ்டீன்</p></div>

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

அதேபோல், எப்ஸ்டீன் தனக்கு மசாஜ் செய்ய பெருந்தொகையைக் கொடுத்து, அதைத் தூண்டிலாக்கியும் பல பெண் குழந்தைகளை தன் தீவுக்கு இழுத்துள்ளதாக ஆவணங்களில் இருக்கிறது. 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகளையே பெரும்பாலும் குறிவைத்ததாகவும் காவல் துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

ஜெம் வீரமணி வழக்கிலும் இதுபோன்ற திட்டமிட்ட செயல்முறை இருந்ததாக புலனாய்வுச் செய்திகள் பல சுட்டிக்காட்டுகின்றன.

வக்கிரமும், மூடநம்பிக்கையும், பணமும், அதிகாரமும் இத்தகைய குற்றங்களை ஊக்குவிக்கிறது என்றால் அதைத் தடுக்க வேண்டிய இடத்தில் உள்ளோர் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்போது அவர்களும் குற்றவாளிகள் ஆகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு.

குழந்தைகளை தற்காப்பது எப்படி?

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் இன்னார் என்று வகைப்படுத்த முடியாது. பெரும்பாலும் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உறவினர்கள் / அண்டைவீட்டார் / நண்பர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இந்த வன்கொடுமையை அதிகமாகச் செய்கின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள்.

எனவே, குழந்தைகளுக்கு வக்கிரக்காரர்களை அடையாளம் காட்ட முயற்சிப்பது கடினம். மாறாக குழந்தைகளுக்கு அவர்கள் உடல் மீதான உரிமையைச் சொல்லித்தர வேண்டும்.

இதில் வயது ரீதியாகப் பிரித்துக் கொள்ளலாம். பள்ளிக்கு அடியெடுத்துவைக்கு 5 வயது தொடங்கி 9 வயது வரை எடுத்துக் கொண்டால், அந்தக் குழந்தைகளுக்கு அவர்களை அந்நியர்கள் எங்கே தொடுவது பாதுகாப்பானது என்று சொல்லித்தரலாம். பாதுகாப்பான தொடுகை இல்லையென்றால் உடனே கூச்சிலட வேண்டும், அங்கிருந்து விடுபட வேண்டும், அதை பெற்றோர் / நம்பகமான பெரியவரிடம் சொல்ல வேண்டும் என்று பழக்கப்படுத்தலாம்.

9 வயது முதல் 14 வயதான குழந்தைகளிடம், மூன்று விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

1. உங்களுக்கு யாரேனும் ரகசியமாக பரிசு கொடுத்தாலோ, சகாயம் செய்தாலோ அதை ஏற்கக்கூடாது.

2. உங்களைப் பெற்றவர், உங்களைவிட பெரியவர், பலம் பொருந்தியவர், பணக்காரர், பிரபலமானவர், ஆன்மிக குரு என்பதாலேயே அவர் பாதுகாப்பான தொடுகையை மீறும் அதிகாரம் கொண்டவர் அல்ல.

3. உங்கள் புகைப்படங்களை ரகசியமாகக் கேட்டால், உங்களிடம் ரகசியமாகப் பேசினால் அந்த நபர் பாதுகாப்பானவர் அல்ல. இவற்றை தெளிவுபடுத்துவதும் மிகவும் அவசியம்.

14 வயதுக்கான மேலான குழந்தைகளுக்கு இணையவழியில் பாலியல் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்பு மிக, மிக அதிகம்.

அதேபோல் ஆண் நண்பர் இருப்பதில் உருவாகும் சக வயதினர் மூலம் வரும் அழுத்தம், அந்த வயதில் ஹார்மோன் மாற்றங்களால் பாலுணர்வு உந்தப்பட்டு அதன் மூலம் எளிதில் வன்கொடுமைக்கு ஆளாகக் கூடிய அபாயம் ஆகியனவற்றைப் பற்றி பெற்றோர் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

பதின்ம வயதில் கருத்தரித்தலால் உருவாகும் உடல், மன பாதிப்பு, கல்வியில் ஏற்படக்கூடிய தடை எல்லாவற்றையும் அவர்களை குற்றவாளிகளாக்காமல் பேச வேண்டும்.

இந்த வயது குழந்தைகளிடம் உங்களுக்கு நம்பகமான 3 பெரியவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். என்ன விஷயமாக இருந்தாலும் அவர்களிடம் சொல்லிப் பழகுங்கள் என்று ஊக்குவிக்க வேண்டும். துரதிர்ஷ்டமவசமாக இந்தியச் சமூகத்தில் குழந்தைகளின் குரலுக்கு செவிகொடுத்து, வழிகாட்டும் போக்கு இன்னும் பெரிய வீச்சு பெறவில்லை.

அதேபோல் பள்ளிகளிலும், உயிரியல் வகுப்பில் இனப்பெருக்கப் பாடங்களையும், பாலியல் ஆரோக்கியம் பற்றிய கல்வியையும் புறக்கணித்துவிட்டு குழந்தைகளின் பாதுகாப்பை முழுவீச்சில் உறுதி செய்யமுடியாது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்த வெளிச்சம், ஆண் குழந்தைகளுக்கு நிகழும் அநீதியில் இல்லை என்பதும் வருத்தத்துக்கு உரியது. பாலியல் வன்கொடுமை ஒரு குழந்தையின் மனதில் ரணம் ஆறினாலும், வடுவாக நினைவலைகளில் தேங்கிக் கொள்ளக் கூடியது.

தகவல் தொழில்நுட்பங்கள் மலிந்து கிடக்கும் இந்த யுகத்தில், குழந்தைகளின் வெளி உலகத் தொடர்பு அதிகரித்துள்ள அதே வேளையில், அவர்களைக் குறிவைக்கும் வேட்டையாடிகள் எந்த முகத்துடன், எந்தத் திசையிலிருந்து வருவார்கள் என்பதைக் கணிக்கவே முடியாது.

ஆண் / பெண் என்று பேதமில்லாமல் குழந்தைகளுக்கு அவர்கள் உடலின் மீதான உரிமையை 5 வயது தொடங்கி 18 வயது வரையில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு நாள் பாடமல்ல. இந்தியாவில் குழந்தைகள் நலனுக்காக சைல்டு ஹெல்ப்லைன் எண் உள்ளது. 1098 என்ற எண் குறித்தும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவையெல்லாம் குழந்தைகளை பாதுகாக்க.

ஒருவேளை குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால், பெற்றோர், உறவினர்கள், அந்தக் குழந்தை வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள், உளவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் என எல்லோரும் சேர்ந்துதான் அந்தக் குழந்தையை மீட்டெடுக்க முடியும்.

போக்சோவை புரிந்து கொள்வோம்...

இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO Act) 2012-ஆம் ஆண்டு நவம்பர் 14 அமலுக்கு வந்தது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனைவரை வழங்க வகை செய்யும் இந்தச் சட்டத்தின் வருகைக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் காவல்துறை உதவியை நாடும் போக்கு அதிகரித்துள்ளது.

போக்சோ வழக்குகள் அதிகரிக்கும் போது அதை விரைவுபடுத்து கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் அமைப்பதும் அவசியமாகிறது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், பழிவாங்கும் நோக்கில் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் நிகழ்கிறது. குறிப்பாக, பதின்பருவத்தினரிடையே (16-18 வயதுடையோர்) சம்மதத்துடன் நடைபெறும் உறவு தொடர்பான வழக்குகளில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாதி, மதம், வர்க்கத்தை பாதுகாக்க சில நேரங்களில் போக்சோ பழிவாங்கும் ஆயுதமாவது சமூக அவலம்.

குழந்தைகள் நலனைப் பேணுவதில் ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையும் மிகப் பெரியது. அதைப் பொறுப்புடன் நிறைவேற்ற சமூகம் ஒட்டுமொத்தமாக, ஒருசேர விழிப்புணர்வு பெற்று முன்னேறி, கைகோத்து செயல்பட வேண்டும். நேர்மறையான வலைப்பின்னல் நோக்கி நகர்வோமாக.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in