

கோவை: நேபாள வெள்ளத்தில் சிக்கி ஈஷா யாத்ரீகர்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் மாயம் என ஈஷா நிறுவனர் சத்குரு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கோவை ஈஷா நிறுவனர் சத்குரு இன்று (ஆக.27) திபெத்தில் இருந்து வெளியிட்ட வீடியோவில் பேசியது: “திபெத் - நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், நேபாளப் பகுதியில் மட்டும் சுமார் 484 பேர் மாயமாகியுள்ளனர். இன்று காலை நானே அங்கு நேரில் செல்வதற்காக புறப்பட முயன்றேன். ஆனால், அங்கு தொலைத் தொடர்பு சேவைகள், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்ல முடியவில்லை.
சகா பகுதியில் நாங்கள் சந்தித்த எஸ்3 குழுவினரும், நாங்கள் மேலே மலையேற்றம் சென்றபோது, கீழே வந்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் சந்தித்தவர்களும் அங்கு இருந்தனர். அந்த ஈஷா யாத்ரீகர்கள் குழுவில் மொத்தம் 80 பேர் உள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை.
அதில், 22 பேர் அமொிக்காவையும், 12 பேர் கனடாவையும், 11 பேர் ஆஸ்திரேலியாவையும், 9 பேர் இங்கிலாந்தையும், 4 பேர் ஜெர்மனியையும், 3 பேர் பிரான்ஸையும், 3 பேர் நேபாளத்தையும், தலா 2 பேர் நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள், தலா ஒருவர் பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த 80 பேரில் 34 ஆண்களும், 46 பெண்களும் உள்ளனர்.
மேலும், அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்த சில தன்னார்வலர்களும் இருந்தனர். அவர்களில் 3 தன்னார்வலர்களும், ஒரு மருத்துவரும் அடங்குவர்.
அழிவின் அளவைப் பார்க்கும்போது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிகிறது. இவர்கள் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு குடியேற்றச் சோதனைக்காக சென்றிருந்த அதே கட்டிடம் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் ஒரு பகுதியே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்குள், இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு, இந்தியாவிலும், நேபாளத்திலும் தகவல் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.
காலை 9.05 மணிக்கு, குடியேற்ற சோதனை மையத்தை அடைந்துவிட்டதாக குழுத் தலைவர் ஈஷங்கா பிரவீனிடமிருந்து எங்களுக்கு செய்தி அதன் பின்னர் 9.14 மணிக்கு இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் முழுநேரமாக இணைந்து பணியாற்றி வரும் பிரவீன்தான் இந்தக் குழுவை வழிநடத்தினார். அவர் எல்லையைத் தாண்டியிருந்தால், அவரது நேபாள தொலைபேசி இணைப்பு செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அந்த நேரத்தில் முழுக் குழுவினரும் அந்தக் கட்டிடத்திலேயே இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.
இது மிகவும் கொடூரமானதும், இதுவரை நாம் எதிர்கொண்டிராத அளவிலான ஓர் அசாதாரண நிகழ்வுமாகும். துரதிர்ஷ்டவசமாக, நிலைமை இவ்வாறு மாறியுள்ளது. இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலமாக அனுமதி பெற முயற்சி செய்து வருகிறோம்.
அமெரிக்க தூதரகமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனக்கும், எங்களுடன் சிலருக்கும் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து, எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை அறிந்து செயல்பட அனுமதி கிடைக்குமா என்று முயற்சிக்கிறோம்” என்று அவர் விவரித்தார்.