

மதுராந்தகத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.47.10 லட்சம் ரொக்கத்தை கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.47.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எல்லை பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அல்லது பரிசு பொருட்களை வழங்குவது என தேர்தல் விதி மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த ராமாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வந்தவாசியில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், ரூ.31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும் மற்றும் மற்றொரு காரில் ரூ.80 ஆயிரம் ரூபாயும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்வது தெரிந்தது. இதையடுத்து, பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது, அச்சாலையில் வந்த காரில் ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்வது தெரிந்தது. மேலும், சோத்துப்பாக்கம் அருகே தனியார் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது ரூ.13 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதால் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்ததால், தேர்தல் நடத்தை விதி காரணமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.47 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்தை, தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.