

காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தேசியத் தலைவர் மோகன் பகவத்.
காஞ்சிபுரம்: ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தேசிய தலைவர் மோகன் பகவத், காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மணி மண்டபத்துக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவர் சங்கர மடத்தின் மடாதிபதிகளை சந்தித்தார்.
ஓரிக்கை மணி மண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதிகள் தற்போது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆன்மிக நிகழ்வின் ஒரு பகுதியாக பக்தர்கள் அவ்வப்போது சந்தித்து ஆசி பெறுகின்றனர். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் காஞ்சிபுரம் வந்தார். ஓரிக்கை மணி மண்டபம் வந்த அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்தார்.
பின்னர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும், ஆன்மிக வளர்ச்சி மற்றும் சமூக நலம் சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசித்ததாகத் தெரிகிறது. இந்நிகழ்ச்சியின் போது காஞ்சி சங்கர மடத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் உடனிருந்தனர்.