ரூ.4 கோடி பணம் பறிமுதல் வழக்கு: நயினார் நாகேந்திரன் மீதான குற்றச்சாட்டு பதிவு நிறுத்திவைப்பு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின்போது ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த வழக்கில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுப் பதிவை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்தப் பணம் நயினார் நாகேந்திரன், அவரது தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் மீதான குற்றச்சாட்டுகள் நாளை (ஆக.12) ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட இருந்தது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்ற விசாரணைக்குத் தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘சிபிசிஐடி காவல் துறை இயந்திரத்தனமாக இறுதி அறிக்கை தயாரித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு எதிரான வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு அளிக்க நான் பணம் கொண்டு சென்றேன் என்பதற்கான சட்டப்பூர்வ ஆதாரங்களை நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி, “மனுதாரர் மீது குற்றம் சுமத்தக்கூடிய எந்த போதுமான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்யவில்லை. எனவே மனுதாரருக்கு எதிராக தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். நாளை குற்றச்சாட்டு பதிவு நடைபெறவுள்ளதால் வழக்கு விசாரணை முடிவடையும் வரை அதைத் தள்ளிவைக்க வேண்டும்” என வாதிட்டார்.

காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், மனுவுக்கு விரிவாகப் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆக.19-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி லட்சுமி நாராயணன், பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை குற்றச்சாட்டுப் பதிவுகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்</p></div>
பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் உயர்வு: மத்திய அரசு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in