

பிரதிநிதித்துவப் படம்
பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் விஷ்ணுபிரசாத் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
அதில், தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2019- 20-ல் 9,77,079 ஆகவும், 2020- 21-ல் 9,18,173 ஆகவும், 2021- 22-ல் 9,24,613 ஆகவும், 2022- 23-ல் 9,51,746 ஆகவும் இருந்து 2023- 24-ம் ஆண்டில் 10,45,015 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதுபோல பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 50.6 சதவீதத்தில் இருந்து 57.5 சதவீதமாகவும், முதுநிலை மற்றும் அதற்கு மேற்பட்டோரின் வேலைவாய்ப்பு விகிதம் 59.5-ல் இருந்து 62.2 ஆக உயர்ந்துள்ளது. 2025 PLFS அறிக்கையின்படி பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 58.8% ஆகவும், முதுநிலை மற்றும் அதற்கு மேற்பட்டோரின் வேலைவாய்ப்பு விதிதம் 63.6% ஆகவும் உயர்ந்துள்ளது.
பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க ஏஐசிடிஇ பாடத்திட்ட மாற்றம், கட்டாய இன்ட்டர்ன்ஷிப், ஏஐசிடிஇ வேலைவாய்ப்பு இணையதளம், தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டுத்துறை, கல்வித்துறை இடையிலான ஒத்துழைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் கல்வித்தளம் மூலம் 500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் 80-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகின்றன. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் 2025- 26-ல் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி முடித்துள்ளதுடன், 17,625 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயிற்சி முடித்தவர்களின் 74 சதவீதம் பேர் வேலைவாய்ப்பில் இணைந்துள்ளனர். மேலும் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக நகரங்களை உருவாக்கி வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதி, வேலை தேடுபவர்களையும், வேலை வழங்குபவர்களையும் ஒருங்கிணைக்கும் என்சிஎஸ் டிஜிட்டல் தளம் மூலம் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு முகாம்கள், தொழில் சார்ந்த ஆலோசனை மற்றும் திறன்பயிற்சி உள்ளிட்ட சேவைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.