கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குபின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றன: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

ஆர்.எஸ்.பாரதி | கோப்புப் படம்
ஆர்.எஸ்.பாரதி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கூட்டணிக் கட்சியினர் தேர்தலுக்குபின் தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை என்றுதான் கூறியுள்ளார். எப்போதும் இல்லை என கூறவில்லை. கம்யூனிஸ்ட்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் இருந்தனர்.

அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஒருநாளில் கம்யூனிஸ்ட்களுக்கு ஏற்பட்ட மனசங்கடம் குறித்து அவர்களிடம்தான் கேட்கவேண்டும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனித்துவிடப்பட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஏனெனில், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் பலம் திமுகவிடம் உள்ளது.

தகைசால் தமிழர் விருது: கூட்டணிக் கட்சியினரை நன்கு மதித்தோம் என்பதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தகைசால் தமிழர் விருது கொடுத்ததே சான்று. கூட்டணி கட்சியினர் தேர்தலுக்கு பின்பு தங்கள் நிறத்தை வெளிப்படுத்துகின்றனர். கொள்கையோடு கூட்டணிக்கு வந்தவர்களின் கொள்கை இப்போது கேள்விக்குறியாக உள்ளது. ஒருமாதத்தில் இந்த அரசு என்ன மாற்றம் செய்துகாட்டியது, திமுக என்ன தவறு செய்தது என்பதை கூட்டணியை விட்டு வெளியேறுபவர்களைத் தான் கேட்கவேண்டும். எனினும், கூட்டணி இல்லை என்றாலே கட்சித் தொண்டர்கள் தெம்பாக இருப்பார்கள். மேலும், எப்போதும் காங்கிரஸ் கூடுதல் சுமைதான்.

மின்வெட்டு செயற்கையானதா அல்லது திட்டமிட்ட சதியா என்ற கேள்வி எழுகிறது. சினிமா போல, இல்லாத மின்வெட்டை ஏற்படுத்தி, அதை ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்தோம் என்ற பிம்பத்தை உருவாக்க முயல்வதாக தோன்றுகிறது. 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியிலும் வெயில் கடுமையாக இருந்தது. ஆனால், இதுபோன்ற மின்வெட்டு இல்லை. மேலும், வைகுண்டம் பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் குறைவான தொகுதி கொடுக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டியதுதானே? திமுக காங்கிரசுக்கு கொடுத்த 28 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். தவெகவுக்கு 108 தொகுதிகள் கிடைத்திருக்காது. தகைசால் தமிழர் விருது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குதான் கொடுக்கப்பட்டது. திமுக தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.பாரதி | கோப்புப் படம்
சென்னையில் சுத்தியலால் அடித்து பெண்ணை கொலை செய்த முதியவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in