

சென்னை: சென்னை, அண்ணாநகர், அன்னை சத்யா நகர் 11-வது தெருவைச் சேர்ந்தவர் சாந்தி (54). சேலை வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், ராஜேந்திரன் (68) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், சாந்தி நடத்தையின் மீது சந்தேகப்பட்டு, அண்மைக் காலமாக ராஜேந்திரன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சாந்தியிடம், மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே சாந்தியை சுத்தியலால் ராஜேந்திரன் தாக்கி உள்ளார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சாந்தி, சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த சம்பவத்தை கூறினார்.
இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், சம்பவ இடம் விரைந்து சாந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.