

சென்னை: “சட்டப்பேரவையில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார்; மறுநாளே ரெய்டு வந்திருக்கிறார்கள்,” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் விஜய் எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்டார். அவருக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. சட்டப்பேரவையில் முதல்வரிடம் எ.வ.வேலு நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார். மறுநாளே ரெய்டு வந்திருக்கிறார்கள்.
50 ஆண்டுகளாக இதெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன விஷயம்; எங்கள் வீட்டுக்கு ரெய்டு வந்தவர்களுக்கு சீட் கொடுத்து அமைச்சராக ஆக்கவில்லை; அந்த கேவலமான காரியத்தை திமுக செய்ததில்லை.
இந்தப் பிரச்சினையை திமுக சட்டப்படி சந்திக்கும்.1977-ல் இருந்து, எங்கள் மீது போடப்பட்ட எந்தவொரு வழக்கும் நிருபிக்கப்படவில்லை.
1977-ல் கருணாநிதியின் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, நான் கூடவே இருந்து பார்த்தவன். இப்போதுள்ள சின்னப் பசங்களுக்கு இது தெரியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.