

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார்
படம்: எல்.சீனிவாசன்
சென்னை: ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவர் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் டிஜிபியிடம் அவர் அளித்த புகார் மனுவில், ‘கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நேரிலும் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவலாக வெளியாகத் தொடங்கின.
மாவட்ட ஆட்சியரின் கணவர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக அண்மையில் ஒரு காவல் துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை உணர்த்துகிறது.
இதையடுத்து, எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து முறையான விசாரணை நடத்த மனு அளித்தனர். எனக்குத் தெரிந்தவரை, அருள் விக்னேஷ் மீது இன்றுவரை முதல் தகவல் அறிக்கை ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மறுபுறம், குறிப்பிட்ட எம்எல்ஏ இக்குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், இவற்றை வதந்திகள் என்றும் அருவருப்பான அரசியல் என்றும் விவரித்து, இவற்றை எழுப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.
எனவே, அருள் விக்னேஷ் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணையைக் சிபிசிஐடிக்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்திற்குக் குறையாத ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் தலைமையிலும், உங்களின் மேலான அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பிலும் விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும்.
மேலும், எம்எல்ஏ-வின் கைபேசிகள் மற்றும் பிற மின்னணுச் சாதனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தவும்; தொடர்புடைய அனைத்துச் செய்திகள், மெட்டாடேட்டா, அழைப்பு விவரப் பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பாதுகாக்குமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட குறுஞ்செய்திச் செயலியின் நிறுவனத்திற்குப் பாதுகாப்புக் கோரிக்கைகளை அனுப்பவும் உத்தரவிட வேண்டும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குரிய ஆட்சியரின் அரசு இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி காட்சிகள், பார்வையாளர் பதிவேடுகள் மற்றும் பாதுகாப்புப் பதிவேடுகளை உடனடியாகப் பறிமுதல் செய்து பாதுகாக்கவும், பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் விரும்பும் இடத்தில், ஒரு பெண் காவல்துறை அதிகாரியால் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவர் விரும்பினால், நீதித்துறை நடுவர் முன்பாக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது பணியாளர்களுக்குப் போதிய மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, “தமிழகத்தில் 77 ஆண்டு காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அனைத்து ஆதாரங்களையும் காவல் துறையினருக்கு கொடுத்துள்ளோம். தனிக் கவனத்துடன் நேர்மையாகவும், நியாயமாகவும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.