

சென்னை: “நடிகர் கமல்ஹாசன் ஒரு வாரத்துக்குள் சண்டியர் திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சண்டியர் என்ற பெயரில் கமல்ஹாசன் எடுக்கும் படத்துக்கு எந்தக் காரணம் கொண்டும் அத்தலைப்பை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புதன்கிழமை (நவ.11) மனு கொடுக்கப்பட்டது. 23 ஆண்டுக்கு முன் அப்போதே சண்டியர் என பெயர் வைத்ததை எதிர்த்து நாங்கள் முதல்வரிடம் மனு கொடுத்தோம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கமல்ஹாசனை அழைத்து அறிவுரை வழங்கியதன் அடிப்படையில், அப்போது வைக்க திட்டமிட்டிருந்த பெயரை கைவிட்டார்.
2004-ல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதே சண்டியர் என்ற பெயரை வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்திருக்கக் கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தபோது, கமிட்டியை கூட்டி இது குறித்து ஆலோசிப்போம் என கூறினர். இன்றைய இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் சினிமா தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிலும், சினிமாவின் தலைப்புகளால் மிகப் பெரிய அளவில் தாக்கத்துக்கு ஆளாகின்றனர்.
2004-ம் ஆண்டு ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதே நடவடிக்கையை இப்போதைய முதல்வரும் எடுக்க வேண்டும். 2025-ம் ஆண்டு கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்துக்கும் எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். அதேதான் இப்போதும் ‘சண்டியர்’ படத்துக்கு கூறுகிறோம்.
நாங்கள் எந்த மொழி, சாதி, மதத்துக்கும் நாங்கள் ஆதரவாக பேசவில்லை. படத்தில் காட்டக்கூடிய காட்சிகளை இளைஞர்கள் ரீல்ஸ் செய்து மோதி கொள்கிறார்கள். சண்டியர் பெயரால் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு மீறப்படும்.
3 மணி நேரம் பொழுதுபோக்கு இடமே திரைப்படம் தவிர, ஆயுத கலாச்சாரத்தையும் அரிவாள் கலாச்சாரத்தையும் உருவாக்க கூடாது. தமிழ் திரைப்படத்தில் அரிவாள் கலாச்சாரம், ஆபாச கலாச்சாரம், சாதிய கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். வன்மத்தை பிரதிபலிக்கும் களமாக திரைப்படங்கள் அமைந்துவிடக் கூடாது. மத்திய தணிக்கை வாரியம், படத்தின் தலைப்பு இறுதியானது அல்ல என கடந்த அக்.26-ம் தேதி கூறியுள்ளனர்.
கமல்ஹாசனுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் தனது படத்தின் பெயரின் தலைப்பை மாற்றிதான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் இல்லையெனில் தமிழகத்தில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் நாங்கள் தொடர் முற்றுகைப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.