

புதுச்சேரி: புதுச்சேரியில் எந்த உதவித் தொகையும் பெறாத சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை குடும்பத் தலைவிகள் 63 ஆயிரம் பேருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை இன்று அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே, 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5 ஆயிரத்தை தமிழக அரசு வங்கிக் கணக்கில் செலுத்தியது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு புதுச்சேரியிலும் ரேஷன் கார்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும், எந்த நிதியுதவியும் பெறாத சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 2 மாதங்களுக்கான மாதாந்திர நிதியுதவி மாதம் தலா ரூ.2,500 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து வழங்க அரசால் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி முதல்வர் ரங்கசாமி உத்தரவின்படி, அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்கு மொத்தமாக ரூ. 31.5 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.