“கோவை மாநகராட்சி நிதி இழப்பு விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on: 
1 min read

சென்னை: ‘கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் சுமார் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சித் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ள தகவல்கள், கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டிற்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது’ என பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கிணறு வெட்டக் கிளம்பிய பூதம் போல, தணிக்கை ஆய்வில் தோண்டத் தோண்ட திமுகவின் ஊழல் முகம் மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

கோவை மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மட்டும் சுமார் ரூ.2,300 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சித் தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சித் தகவல்கள், கடந்த திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டுக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் மற்றுமொரு சான்றாக அமைந்திருக்கிறது.

அரசாணைப்படி சொத்து வரியை முறைப்படுத்தாததால் ரூ.1,194 கோடி இழப்பு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்கு முறையற்ற சொத்து வரி விதித்ததால் ரூ.87.17 கோடி இழப்பு, அனுமதியற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ரூ.274 கோடி இழப்பு, திடக்கழிவு மேலாண்மையில் மட்டும் ரூ.150 கோடி இழப்பு என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டும் ஒவ்வொரு விவரமும் அதிர்ச்சியளிக்கிறது.

இத்துடன், ஒப்பந்த விதிமீறல்கள், வட்டி வசூலிக்காததால் ஏற்பட்ட இழப்புகள், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களில் கண்டறியப்பட்ட முரண்பாடுகள் என முறைகேடுகளின் பட்டியல் நீள்கிறது.

கோவை மாநகராட்சியிலேயே ரூ.2,300 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு என்றால், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறைகளில் முறையாகத் தணிக்கை மேற்கொண்டால் இன்னும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்குமோ?

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஏஐ ஊழல் வரை அரங்கேற்றி மக்கள் வரிப்பணத்தினை ஏப்பம் விட்டதுதான் சாதனையாக இருந்திருக்கிறது.

இந்த நிதி இழப்புகளுக்குப் பின்னால் உள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
“ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் சிலரது அடித்தளமே ஆட்டம்...” - முதல்வர் விஜய் பேச்சு

X