

சென்னை: தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 மாவட்டங்களில் 'நம்பிக்கை இல்லம்' அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “மாற்றுத் திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய முதல்வர் விஜய் மனதார எண்ணுகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நமது அரசின் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது.
தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்களான விளையாட்டு செயற்கை கால், மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் மற்றும் பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் கோக்ளியர் இம்ப்ளான்ட் பேட்டரி போன்ற உயர்வகை உபகரணங்களை வாங்குவதற்காக, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும்.
தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் ‘நம்பிக்கை இல்லம்’ என்ற பெயரில் அமைக்கப்படும். இந்நிறுவனங்களில், மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, ஆரம்பகால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
தொடக்க நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் 50 மாணவர்கள் பயிலும் பகல்நேரப் பள்ளியாக செயல்பட்டு, பின்னர் தங்குமிட வசதியுடன் கூடிய நிறுவனமாக மேம்படுத்தப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்