ரயில் பயணி தவறவிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் எழும்பூரில் மீட்பு

ரயில் பயணி தவறவிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் எழும்பூரில் மீட்பு
Updated on
1 min read

சென்னை: மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சிறப்பு ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மங்களூரு சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூருக்கு (செவ்வாய்க்கிழமை ) இன்று காலை சிறப்பு ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலின் பி-2 பெட்டியின் இருக்கை எண் 52-ல் பயணித்த ஒருவர் தனது பையை தவறவிட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து, எழும்பூர் ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளர் கணேஷ்-க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், எழும்பூர் ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளர்கள் சனிலா, அன்புச்செல்வன், தலைமை பெண் காவலர் சந்தியா ரஜினி, பெண் காவலர் அஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு விரைந்தனர். மேலும், அங்கு கேட்பாரற்று கிடந்த அந்த பையை பத்திரமாக மீட்டனர்.

அதைத் சோதித்த போது, வெள்ளி டாலர் கொண்ட ஒரு தாலிச் செயின், ஒரு ஜோடி தங்கக் கம்மல், ஒரு தங்க பிரேஸ்லெட் (கைக்காப்பு), ரொக்கப் பணம் ரூ.420 ஆகியவை அதில் இருந்துள்ளன. அந்த தங்க நகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.

தொடர்ந்து, அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு அந்தப் பையின் உரிமையாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்கப்பட்ட பொருட்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆர்.பி.எஃப் போலீஸாரின் இந்த விரைவான செயலை எழும்பூர் ஆர்பிஎஃப் ஆய்வாளர் சுனில்குமார் மற்றும் ரயில்வே உயரதிகாரிகளும், பயணிகளும் வெகுவாகப் பாராட்டினர்.

ரயில் பயணி தவறவிட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் எழும்பூரில் மீட்பு
குதிரை பேர விவகாரம்: திருவல்லிக்கேணி காவல் நிலைய வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in