

ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம்
சென்னை: சென்னை மாநகரின் பழமையான பேருந்து நிலையங்களில் ஒன்று பிராட்வே பேருந்து நிலையம். தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் அருகில் உள்ள குறளகம் வளாகம் ஆகியவற்றை இணைத்து வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.820 கோடி மதிப்பீட்டில் நவீன போக்குவரத்து முனையம் கட்டப்பட உள்ளது.
இதனிடையே இந்த கட்டுமான பணிக்காக பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற முதலில் முடிவு செய்யபட்டு பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
அதன்பின்னர் ராயபுரத்தில் சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 2024 நவம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு ஜூன் மாதத்தில் கட்டுமானம் நிறைவு செய்யப்பட்டது.
அந்த பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் இடம், போக்குவரத்து ஊழியர்கள் உணவு உண்ணும் இடம், ஆவின் டிப்போ, பாலூட்டும் அறை, முதலுதவி அறை, தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 6 மாதங்களுக்கு முன்பாக பேருந்து நிலையம் தயாரான நிலையில் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு: இதன்காரணமாக அருகில் உள்ள குடிருப்புகளில் உள்ளோர் பேருந்து நிலையத்தில் தங்கள் கார்களை நிறுத்தி செல்கின்றனர். மேலும் சிறுவர்கள் சிலர் சைக்கிள் சாகசம் செய்யவும், இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்யவும் இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனர். மாலை நேரங்களில் சிலர் மது அருந்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பிராட்வே பேருந்து நிலைய மறுகட்டுமானம் வரை பயன்படுத்த தற்காலிக பேருந்து நிலையம் ராயபுரத்தில் கட்டப்பட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் பிராட்வேவுக்கு வந்து செல்லும் அனைத்து பேருந்துகளையும் கையாள போதிய இடவசதி இல்லை.
இதன்காரணமாக தற்போது தீவுத்திடலின் ஒரு பகுதியில் மற்றொரு தற்காலிக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது, அந்த பணிகள் முடிந்ததும் மணலி, எண்ணூர், கொரட்டூர், அம்பத்தூர் என வடக்கு பக்கம் செல்லும் பேருந்துகள் ராயபுரத்தில் இருந்தும், மயிலாப்பூர், பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர் என தென்சென்னை மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லும் பேருந்துகள் தீவுத்திடலில் இருந்தும் இயக்கப்படும்” என தெரிவித்தனர்.