குற்றாலம் மெயின் அருவி பாறை சிற்பங்கள் சேதம்: புதிய ஆர்ச் கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை

குற்றாலம் மெயின் அருவி பாறை சிற்பங்கள் சேதம்: புதிய ஆர்ச் கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
Updated on
1 min read

மதுரை: குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் பாறை சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டதால், அங்கு நடந்து வரும் கட்டுமானப் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: குற்றாலம் மெயின் அருவி பகுதியில் புதிய ஆர்ச் கட்டுமான பணியின்போது பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழமையான சிவலிங்க சிலைகள் சேதமடைந்துள்ளது.

குற்றாலநாதர் கோயில் அருகே அமைந்துள்ள இந்த அருவி, ஆன்மிகத் தலமாகவும், முக்கிய சுற்றுலா மையமாகவும் உள்ளது. சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை குற்றாலத்தில் அமைந்துள்ளது.

மெயின் அருவியின் அடிப்பகுதியில் பல சிவலிங்கங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. அருவியில் வரும் மூலிகைத் தண்ணீரால் இயற்கை அபிஷேகம் நடைபெறுகிறது. பயணிகள் பாதுகாப்புக்காக முன்பு பெரிய சிமென்ட் ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது. அருவியின் நீர்வரத்தை கட்டுப்படுத்தவும் அந்த ஆர்ச் பயன்பட்டது.

தற்போது சீசனை முன்னிட்டு பழைய ஆர்ச்சை இடித்து புதியது அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளின்போது பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் இரும்பு பொருட்கள் காரணமாக சிலைகள் சேதமடைந்தது. இந்த சிலைகளை இந்தியாவின் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டும். முறையான உத்தரவு இல்லாமல் அவற்றை அழிக்கவோ, மாற்றம் செய்யவோ, வேறு இடத்துக்கு மாற்றவோ கூடாது.

அருவியில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவம் மற்றும் சிவலிங்க திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர். இந்த உருவங்களை பின்நாளில் மக்களின் கவனத்தை திசை திருப்பி வெளிநாடுகளுக்கு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் பழங்கால சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், அந்த சிலைகளை மீண்டும் அதே இடத்தில் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், குமரப்பன் அமர்வு இன்று விசாரித்தது. அரசு தரப்பில், ‘சிற்பங்களை சிதைக்காமல் குற்றாலம் பிரதான அருவி பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

பின்னர் நீதிபதிகள், ‘சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக , 2000-ம் ஆண்டு பழமையான பாறை சிற்பங்களை சிதைத்தது ஏன்? பழமையான நினைவுச் சின்னங்களை முதலில் பாதுகாக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிற்பங்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்.

குற்றாலம் அருவியில் குளிக்க வரும் பயணிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அங்குள்ள பாறை சிற்பங்களை பாதுகாக்க ஏன் கொடுக்கவில்லை?

மறு உத்தரவு வரும் வரை குற்றாலம் மெயின் அருவியில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. சிற்பங்களை சிதைக்க கூடாது. விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

குற்றாலம் மெயின் அருவி பாறை சிற்பங்கள் சேதம்: புதிய ஆர்ச் கட்டுமான பணிக்கு ஐகோர்ட் தடை
ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்யிடம் தமிழக ஆளுநர் கூறியது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in