

கோப்புப் படம்
சென்னை: சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஆனால், இந்தப் பணிகள் ஆண்டுக்கணக்கில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நான்கு வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரியும் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந் திருந்தார்.
நான்கு வழிச்சாலை இல்லாத விக்கிரவாண்டி - தஞ்சாவூர் வழித்தடத்தில் டோல் கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படுவதால் இந்த சாலைப் பணிகள் முடிவடையும்வரை டோல் கட்டணம் வசூலி்க்க தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.சுமதி ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தஞ்சாவூர் நான்குவழிச் சாலை திட்ட இயக்குநரான பி.செல்வக்குமார் தாக்கல் செய்திருந்த அறிக்கை: விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை திட்டம் 3 கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், மின்சாரம் உள்ளிட்ட பயன்பாட்டு வசதிகளை மாற்றுதல், வீராணம் குடிநீர் குழாயை மாற்றுதல், கஜா, புரெவி புயல்கள், கரோனா, கட்டிடங்கள் மற்றும் மதக் கட்டமைப்புகளை அகற்றுதல், அனுமதிகள் கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமானது.
தற்போது இடையூறு இல்லாத வகையில் நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி – சேத்தியா தோப்பு இடையிலான பணிகள் ஏற்கெனவே ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, எதிர்பார்த்த வகையில் பணிகள் நடைபெறாததால் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு எஞ்சிய பணிகள் மற்றொரு நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டு 2025 ஜூன் முதல் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, விக்கிரவாண்டி முதல் சேத்தியாதோப்பு வரையிலான இறுதிகட்டப் பணிகள் 2027 ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
ஏற்கெனவே சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையிலான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதலும், சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான பணிகள் முடிக்கப்பட்டு 2024 நவம்பர் முதலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள்ளாகவோ, அதற்கு முன்பாகவோ முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.