முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்

முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வருக்கான புதிய அலுவலகம் அமைக்கும் பணிக்கான டெண்டரை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் கோரி அந்நிறுவனம், இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள 10 மாடி கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு முதல்வர் அலுவலகம் மாற்றப்பட உள்ளது.

இந்த அலுவலகத்தில் முதல்வருக்கான பிரத்யேக அறை, தனிச் செயலாளர்களுக்கான அலுவலகங்கள், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆலோசனைக் கூட்ட அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் அமைய உள்ளன.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பொதுப்பணித் துறை சார்பில் கடந்த மாதம் டெண்டர் கோரப்பட்டது. மொத்தம் 3 பிரிவுகளாக இந்தப் பணிகள் பிரிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, பிரிவு 1-ல் ரூ.2.41 கோடிக்கு நிர்வாக அலுவலக வசதிகளை மேம்படுத்தவும், பிரிவு 2-ல் ரூ.2.01 கோடியில் உள் கட்டமைப்பு பணிகளுக்கும், பிரிவு 3-ல் ரூ.1.12 கோடிக்கு இதர பணிகளுக்கும் என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டது.

டெண்டரில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் இருந்த 4 நிறுவனங்களில், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அரசு நிர்ணயித்த ரூ.5.54 கோடியை விட 32 சதவீதம் குறைவாக, அதாவது ரூ.3.78 கோடிக்கு பணிகளை முடிக்க முன்வந்தது.

குறைவான தொகையைக் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும் எனப் பொதுப்பணித் துறை நிபந்தனை விதித்துள்ளது.

முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்
ஆசிரியர் தினம் இன்று கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in