

சென்னை சோழிங்கநல்லூரில் ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய ‘பான் ஐஐடி டெக்4பாரத்’ கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை: தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக இல்லை. முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் ஐஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘பான் ஐஐடி டெக்4பாரத்’ என்ற கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார்.இதில் அவர் பேசியதாவது: இந்தியாவில் ஐஐடிகள் 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஒருபுறம் கல்வியின் மூலமாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஆட்களைதான் நாம் தயார் செய்துவந்துள்ளோம்.
அந்த நிலையைமாற்ற வேண்டும் தன்னம்பிக்கையுடன் இலக்கு நிர்ணயித்து, தெளிவுடன் இயங்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். அதற்கு சுதேசிக் கொள்கையை நமது நாடு பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
நாட்டிலேயே தமிழகம் உயர்கல்வியில் முன்னேறிய நிலையில் உள்ளது. உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு உள்ளது. இது இந்திய சராசரியைவிட மிக அதிகம். தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பொறியாளர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம் பேர் பிஎச்டி முடிக்கின்றனர்.
அதேநேரம் தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக இல்லை. முதலீடுகளை ஈர்ப்பதிலும் பின்னோக்கிச் செல்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்ததமிழகம் தற்போது 6-வது இடத்துக்குச் சென்றுள்ளது. முதலீட்டாளர்கள்தான் நம்மை தேடி வரவேண்டுமே தவிர, நாம்அவர்களை தேடிச் செல்லக்கூடாது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தமிழகம் பெற்றுள்ளது.
இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தில் கல்வித் தரம் போதுமான அளவில் இல்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களால் பிளஸ் 2 வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை. பொறியியல் கல்வி முடித்தமாணவர்கள் பொறியாளருக்கான தகுதி வாய்ந்தவர்களாக இருப்பதில்லை.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 45 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியாற்றும் ஆசிரியர்களில் பலரும் போதிய தகுதியுடன் இருப்பதில்லை. தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் தமிழக கல்வி நிறுவனங்கள் அதிக இடங்களை பிடிப்பது உண்மைதான். ஆனால், அதில் மத்திய கல்வி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள்தான் அதிகம் வருகின்றன.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் குறைவாகவே உள்ளன. தமிழகத்தின் கல்வி தரமானதாக மாறினால்தான் சிறந்த மாணவர்கள், பொறியாளர்களை உருவாக்க முடியும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உட்பட பல்வேறு ஐஐடிகளின் இயக்குநர்கள், ஐஐடி முன்னாள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.