

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல், கூட்டுறவுத் துறை செயலருக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாகண்ணு அனுப்பியுள்ள மனு: தமிழக விவசாயிகள் நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்காததால் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குள்ள அரசு அதிகாரிகள் அவற்றை வாங்க மறுக்கின்றனர்.
அதேநேரம், 40 கிலோ மூட்டைக்கு ரூ.80 லஞ்சம் கொடுத்தால் கொள்முதல் செய்கின்றனர். கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கடன் கேட்டால் 2 மாத வைப்புத் தொகையாக ரூ.20 ஆயிரம் வாங்கிக் கொண்டு கடன் வழங்குவது சரியல்ல.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
40 கிலோ நெல்லை சாக்குப்பையில் அள்ளி தைத்துக் கொடுக்க அரசு ரூ.10-க்கு பதில் ரூ.20 கொடுத்தால், விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பது தவிர்க்கப்படும். அங்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.