

சென்னை: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுடைய சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 5.30 லட்சம் தடுப்பூசியை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.
உலக அளவில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கர்ப்பப்பை வாய் புற்று நோயால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படும் பெண்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 80 ஆயிரம் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இலவசமாக செலுத்தப்படும் இதை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு வளரிளம் பருவத்திலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, நாடு முழுவதும் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ‘ஹெச்பிவி’ தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்.28-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
அதற்காக, இதுவரை 5.30 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசியை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. பள்ளிகள், அரசு மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக சிறுமிகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.