

படம்: நா.தங்கரத்தினம்
தமிழகத்தில் வலதுசாரிகள் வளர்ந்து வருகின்றனர், வலுப்பெற்று வருகின்றனர் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று மக்கள் அதிகாரக் கழகம் சார்பில், தமிழ்நாடு பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: ஆணவக் கொலைகள் அதிகரிக்க வலது சாரி அரசியல்தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. அதை மறுக்கவும் முடியாது. வலதுசாரி அரசியல் என்பது பழமைவாதத்தின் மீது நம்பிக்கை கொண்ட அரசியல். மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என பிரிப்பது இறைவனின் முடிவு என மக்களை நம்ப வைக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் வலது சாரிகள் வளர்ந்து வருகின்றனர். வலுப்பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்த ஆணவக் கொலைகளே சான்றுகளாக உள்ளன. சாதிப் பெருமைகளை பேசச்சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள் யார், ஜனநாயக சக்திகள் ஒரே அணியில் திரளாமல் தடுத்து மீண்டும் சாதி என்னும் சகதிக்குள் நம்மை அமிழ்த்துவது யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அத்தகையவர்களை நாம் வலதுசாரிகள் என்கிறோம். சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடக் கூடாது என்பவர்கள் வலது சாரிகள். அத்தகையவர்கள் அம்பேத்கரை தலைவர் இல்லை எனச் சொல்கின்றனர். இத்தகைய வலதுசாரி சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
தமிழர் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் உண்மையில் தமிழர்களாக வாழவில்லை. சாதியாகவே பிறக்கிறோம். மடிகிறோம். இப்படித்தான் நம்மை இந்த சமூக கட்டமைப்பு இயக்கிக் கொண்டிருக்கிறது. சாதியிலிருந்து வசமாக மீள முடியாமல் அதில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். சாதி அடையாளத்தோடு வாழும் வகையில் நமது வாழ்வு நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மனு தர்மக் கொள்கைளையும், சனாதனத்தையும் வீழ்த்த வேண்டும்.
என்னால் புரட்சிகரமாக சிந்திக்க முடியும். எழுத முடியும். பேச முடியும். ஆனால், குடும்பத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. இதுதான் சமூகத்தில் அரசியல் களத்தில் காணும் கசப்பான உண்மை. அதை தகர்க்கும் முயற்சிதான் நமது பண்பாட்டு பெருவிழா என்பதை நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.