

கோவை அரசு மருத்துவமனை டெங்கு வார்டு
படம்: ஜெ.மனோகரன்
சென்னை: டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் விஜய் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கடல் நீர் உட்புகுதல், கடல் அரிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட வேண்டுமென்றும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரக் கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதையும், வெள்ளப் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டிற்குத் தயாராக இருப்பதையும் உறுதி செய்திட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
அத்துடன், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும், நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும், அவசரகால மீட்புப் பணிகளின்போது, மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்படுவதையும், செயற்கைக்கோள் தொலைபேசி (Satellite phone) உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக உள்ளதா என்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென்றும், சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் தமிழக முதல்வர்தெரிவித்தார்.
மேலும், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பருவமழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, எல்-நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட ஆய்வறிக்கையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முதல்வரிடம் வழங்கினார்.
டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள்:
டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டவாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, நோய் அதிகரித்து வரும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் முதலியவற்றைக் கண்டறிந்து கொசுப்புழு மற்றும் முதிர் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மருந்து அடிக்கும் உபகரணங்களின் இருப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, ஏடீஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதோடு, தேவையான ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், திரவ சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், இப்பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், தலைமைச் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக ஈரோட்டிலிருந்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் விழுப்புரம், இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.