அம்மா உணவகங்களில் காஸ் தட்டுப்பாட்டால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வருவாய் குறைந்தது: மேயர் ஆர்.பிரியா விளக்கம்

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா

Updated on
1 min read

சென்னை: சர்வதேச போர் பதற்ற சூழலால் ஏற்பட்ட காஸ் தட்டுப்பாட்டால், ஏப்ரல் மாதம் மட்டும் அம்மா உணவகங்களில் வருவாய் குறைந்தது என்று, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் விஜய் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினசரி சராசரியாக 67,164 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு பயனடைந்து வந்த நிலையில், தற்போது, தினசரி சராசரியாக 1.04 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.87.60 லட்சம் வருவாய் வந்த நிலையில், தற்போது ரூ.1.35 கோடியாக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, முந்தைய திமுக அரசு அம்மா உணவகங்களை சரியாக பராமரிக்கத் தவறியது என்று, அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்தவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கவும் தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022-ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் ரூ.7.06 கோடி செலவில், அம்மா உணவகங்களின் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன.

சீரமைப்பு பணிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு

அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் சீரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதி யாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் ரூ.1.13 கோடியை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் ரூ.1 கோடிக்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது.

இந்நிலையில், சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது.

பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே, ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை&nbsp;மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா</p></div>
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்றவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in