

சென்னை: பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற அசாம் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் குமரன் (28). கொளத்தூர் வேலவன் நகரில் பழைய தங்க நகைகளை வாங்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாப் பெட்டியில் இருந்த பணம், தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், மறுநாளான 18-ம் தேதி அதிகாலை கொளத்தூர் பாரதி நகரில் உள்ள வங்கி ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையன், இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தின் பணப்பெட்டியை உடைத்தார். உடைக்க முடியாதததால் அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முடியாததால் அங்குள்ள மின்காந்த பூட்டு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட சாதனங்களை சேதப்படுத்தி தப்பினார்.
இந்த விவகாரம் குறித்து கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இரு சம்பவ இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில், இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் தீவிர தேடுதல் நடத்தி, அசாம் மாநிலம் உதல்குரி பகுதியைச் சேர்ந்த பீம் பகதூர் சேத்ரி (27) என்பவரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட பீம் பகதூர் சேத்ரி கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்ததும், விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கொள்ளையில் இறங்கியதும் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.