

இரட்டைமலை சீனிவாசன்
சென்னை: இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் இரட்டை மலை சீனிவாசன். தீண்டாமை ஒழிப்பு மற்றும் பஞ்சமி நில மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர். லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கருடன் இணைந்து பங்கேற்றார் என்பது இவரது சிறப்பு. இன்று அவரது பிறந்தாள். அவரை நினைவுகூர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: ”சமூக நீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
கல்வி, சுய மரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளி விளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது. அவரது உயரிய லட்சியங்களைப் போற்றியும் பின் பற்றியும், சமத்துவமும் மனித நேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்” என்று கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்: ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டை மலை சீனிவாசன், வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த லண்டனில் இருந்து அவரது பிறந்த நாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன். நம் மண்ணில் தீண்டத் தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கை குலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டை மலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயான பூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என திராவிட மாடல் ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ”சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன்னலமின்றி போராடிய முன்னோடி, இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாள் இன்று. கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பு, தலைமுறைகள் கடந்தும் சமத்துவப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறது.
அவரது தொலைநோக்கு சிந்தனை, உறுதியான சமூகப் பணி மற்றும் மனித சமத்துவத்தின் மீதான அர்ப்பணிப்பு இன்று வரை நமக்கு ஊக்கமளிக்கிறது. அவர் கனவு கண்ட சமத்துவமும் மனித நேயமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை ஆகும்.” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்: “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இடைவிடாது ஒலித்து அவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய புரட்சியாளர் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த தினம் இன்று.
சமத்துவம், மனித நேயம் மற்றும் சுய மரியாதையை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூக நீதி போராட்டங்களின் மூலம் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை விதைத்த தீண்டாமை ஒழிப்பு போராளி இரட்டை மலை சீனிவாசனை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்” என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.