

அமைச்சர் செங்கோட்டையன்
கோவை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதல்வரின் ஒப்புதலுடன், தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் களத்தில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்கு, முதல்வரின் ஒப்புதலோடு தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் அரசு அலுவலர்கள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், களப்பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று மழைநீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 250 படகுகளும், மீனவர்களும் தயார் நிலையில் உள்ளனர். அதிமுகவிலிருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் கூறினேனே தவிர, 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று எந்த இடத்திலும் நான் குறிப்பிடவில்லை.
மக்களுக்கு விரைந்து சென்று பணியாற்ற வேண்டிய இந்த முக்கிய நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் விமர்சனங்களுக்கெல்லாம் பதில் கூறி, நேரத்தை விரயம் செய்ய தேவையில்லை. அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து, அதிமுகவின் இரு பிரிவுகளிடமும் கேட்க வேண்டிய கேள்வியே தவிர, என்னிடம் கேட்க வேண்டியதல்ல. அதிமுகவில் இருந்து என்னை பழனிசாமி நீக்கியது, ஒரு வகையில் எனக்கு செய்த நன்மையே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.